Saturday, December 26, 2009

MindTree History




''சொன்னால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்... திருக்குறளைப் படித்துப் படித்தே எனக்கான மேனேஜ்மென்ட் பிரின்சிபிள்ஸை உருவாக்கிக் கொண்டவன் நான்! திருவள்ளுவர், பிஸினஸ் ஸ்கூல் பேராசிரியர் அல்ல. நானும் முறைப்படி எந்த பிஸினஸ் ஸ்கூலிலும்சேர்ந்து எம்.பி.ஏ. படித்ததில்லை. ஆனால், நிர்வாக மேலாண்மை பற்றித் தெரிந்துகொள்ள நினைத்தபோது திருக்குறள் காட்டிய விதிமுறை களைத்தான் நான் பின்பற்றினேன். அறிவார்ந்த விஷயங்களுக்கு குறள் என்றால் அற்புதமான மன உணர்வுகளுக்கு கவிஞர் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள். இவை இரண்டும் எப்போதும் என்னிடம் இருக்கும்'' - 250 மில்லியன் டாலர் கம்பெனி ஒன்றின் சி.இ.ஓ-வான ஜானகிராமன் இப்படிப் பேசப் பேச, நமக்கு உண்மையிலேயே ஆச்சரியம்!

''அடுத்த சில மணி நேரத்துக்குள் ஜப்பான் கிளம்புகிறேன், அங்கிருந்து அமெரிக்கா... திரும்பி வர ஒரு வாரம் ஆகும். எனவே, வேகமாகப் பேசி முடித்துவிடலாமா?'' என்று கேட்டபடி நம்மோடு பேசினார் ஜானகிராமன். அவரது வேகம் உண்மையிலேயே அசர வைத்தது.

''நான் பிறந்தது கும்பகோணத்தில். ஆரம்பப் பள்ளியை சுவாமிமலையில் உள்ள அரசுப் பள்ளியிலும் அதன்பிறகு 11-ம் வகுப்பு வரை கும்பகோணத்தில் உள்ள நேட்டிவ் ஹைஸ்கூலிலும் படித்தேன். பள்ளியில் படித்ததெல்லாம் தமிழ் மீடியத்தில்தான். பிறகு திருச்சியில் உள்ள ஆர்.இ.சி-யில் (இப்போது என்.ஐ.டி.) பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தேன். அதற்கடுத்து சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.டெக். எலெக்ட்ரிக்கல் படித்தேன்.

என் அப்பா ஒரு போஸ்ட் மாஸ்டர். கவர்மென்ட் வேலையை கடவுள் வேலையாக நினைப்பார். இரவு 12 மணிக்கு ஒரு தந்தி வந்தாலும் அர்த்தஜாமத்தில் கொட்டும் மழை என்றாலும் போய்க் கொடுத்துவிட்டு வந்துதான் தூங்குவார். அம்மாவும் சரி, அப்பாவும் சரி எங்களை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தனர். 'நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து படிப்புதான்' என்பார் என் அம்மா. எனக்கு ஆறு வயது இளையவள் என் தங்கை. 14 வயது இளையவன் என் தம்பி. எங்கள் மூவரையும் நன்றாகவே படிக்கவைத்தனர் என் பெற்றோர். என் அப்பாவுக்கு அரசு வேலை என்பதால் அடிக்கடி ஊர் மாற்றலாகிப் போய்விடுவார். நான் என் தாத்தா வீட்டில் தங்கித் தொடர்ந்து படித்தேன். அப்போது படிப்பில் எனக்கு உறுதுணையாக இருந்தது என் மாமாவும் அத்தையும்தான். இன்று நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அவர்கள் எல்லோரும்தான் காரணம்'' - நன்றியுணர்வு பொங்க... கடந்த வந்த பாதையைப் பற்றிச் சொல்கிறார் ஜானகிராமன்.

முதல் வேலையை யாராலுமே மறக்கமுடியாது. ஆனால், ஜானகிராமனைப் பொறுத்தவரை முதல் வேலை மட்டுமல்ல, இரண்டாவது வேலையையும் அவரால் மறக்கமுடியாது.

''கடந்த 29 ஆண்டுகளாக நான் இரண்டே இரண்டு கம்பெனிகளில்தான் வேலை பார்த்திருக்கிறேன் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆச்சரியமான விஷயம்தான். சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.டெக். படித்து முடிக்கும் சமயத்தில், கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. 'விப்ரோ' நிறுவனத்தின் உயரதிகாரிகள், ஆர். அண்ட் டி துறையின் அசிஸ்டென்ட் இன்ஜினீயர் பதவிக்கு பல மாணவர்களை இன்டர்வியூ செய்தார்கள். எங்களில் யாருக்கு வேலை என்பதை உயரதிகாரிகளால் முடிவு செய்ய முடியவில்லை. எனவே 'விப்ரோ' நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜியே மும்பையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார்! என்னோடு சேர்ந்து நான்கைந்து பேரை அவரே இன்டர்வியூ செய்தார். கடைசியில் என்னை மட்டுமே தேர்வு செய்தார். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற மாதிரி இருந்தது எனக்கு! 'விப்ரோ' நிறுவனம் அப்போதுதான் பெங்களூருவில் புதிதாக ஐ.டி. டிவிஷனைத் தொடங்கி இருந்தது. அதில் சேர்ந்த மூன்றாவது ஊழியன் நான் என்று பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது.

'விப்ரோ' ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. தொழில்நுட்பம், நிர்வாகம், வியாபாரம் போன்றவற்றை நான் இன்னும் ஆழமாக அங்குதான் கற்றுக்கொண்டேன். 'விப்ரோ'வில் திறமைக்கு எப்போதுமே மதிப்புக் கொடுப்பார்கள். எனவேதான் 'விப்ரோ ஆர் அண்ட் டி'-யில் சர்வதேச நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றேன். 1999-ல் 'விப்ரோ'விலிருந்து நான் விலகியபோது எனக்குக் கீழே 2,200 இன்ஜினீயர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் 'விப்ரோ' நிறுவனத்தை விட்டு விலகினேன். 'விப்ரோ' நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த அசோக் சூடா (Ashok Soota) உள்பட நாங்கள் 5 பேர் அதிலிருந்து விலகி, வேறு சில நிறுவனங்களிலிருந்து வந்த இன்னுமொரு 5 நண்பர்களோடு சேர்ந்து, 'மைண்ட் ட்ரீ' என்கிற புதிய ஐ.டி. நிறுவனத்தைத் தொடங்கினோம். புதிய நிறுவனத்தின் ஆர். அண்ட் டி பணியை நான் எடுத்துக்கொண்டேன். 10 ஆண்டுகளுக்குள் 'மைண்ட் ட்ரீ' நிறுவனம் 250 மில்லியன் டாலர் வருமானம் கொண்ட நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. இன்று எனக்குக் கீழே 3,000 இன்ஜினீயர்கள் வேலை பார்க்கிறார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் எங்கள் நிறுவனத்தின் வருமானம் ஒரு பில்லியன் டாலராக இருக்கவேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அந்த இலக்கை நோக்கி நம்பிக்கையோடு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்'' என்கிறார் ஜானகிராமன்.

சரி, அவர் பின்பற்றும் நிர்வாகக் கொள்கைகள் என்ன என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''இன்று நேற்றல்ல, கடந்த முப்பது ஆண்டுகளாக நான் பின்பற்றிவரும் நிர்வாகக் கொள்கைகள் மூன்றே மூன்றுதான். அனுபவத்தில் நானே உருவாக்கிக்கொண்ட கொள்கைகள் இவை.

1. எதையும் எளிதில் விட்டுவிடாதே!

இருவர் ஒரு கரையிலிருந்து நீந்தி மறுகரைக்குச் செல்ல முயன்றனர். பாதி வழியின்போது ஒருவன், 'இனியும் என்னால் முடியாது. நான் திரும்புகிறேன்' என்றான். மற்றவன் சொன்னான்: 'பாதி ஆற்றைத் தாண்டிவிட்டாய். இனி அடுத்த கரையைத் தொடுவதற்கும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிச் செல்வதற்கும் சமதூரம்தான். மனதைத் தளரவிடாதே. முன்னேறு' என்று சொன்னான். இந்த மனநிலையில்தான் நான் எப்போதும் இருப்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதை எளிதில் விட்டுவிடக்கூடாது. நம் மீது நம்பிக்கை வைத்து கடைசிவரை போராடவேண்டும் என்பதில் குறியாக இருப்பேன். ஆறாம் வகுப்பில் படித்தபோதும் சரி, பின்னாட்களில் இன்டர்வியூவின் போதும் சரி, இப்போது ஒரு சி.இ.ஓ-வாக இருக்கும்போதும் சரி, இந்த விஷயத்தில் சமரசமே செய்துகொள்ள மாட்டேன்.

இதற்காக என்னால் அடையமுடியாத ஒரு விஷயத்துக்காக என் சக்தியைத் தேவையில்லாமல் செலவழிக்கவும் மாட்டேன். அது நமக்குக் கிடைக்கவில்லை; அந்த விஷயத்தில் நாம் தோற்றுப் போய்விட்டோமே என்று கவலைப்படவும் மாட்டேன். என்னால் எந்த விஷயத்தைச் சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதைச் சந்தோஷமாகச் செய்யப் போய்விடுவேன்.

2. விவேகமான வேகம் போதும்!

அதிவேக வளர்ச்சியில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. வேகமாக வளரும் எதுவும் அற்ப ஆயுள் கொண்டவையாகவே இருந்திருக்கின்றன என்பது என் கணிப்பு. எனவே எந்த விஷயமாக இருந்தாலும் அதை நிதானமாகச் செய்தாலும் சரியாகச் செய்யவேண்டும் என்று நினைப்பேன். இது எனக்கு மிகப்பெரிய அளவில் பொறுமையைக் கொடுத்தது. சின்னச் சின்ன அதிருப்திகள் ஏற்பட்ட போதும் நான் பொறுமையாக இருந்ததால்தான் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கமுடிந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஐ.டி. துறை அதிவேகமாக வளர ஆரம்பித்தபோது கம்பெனிகளை விட்டுத் தாவுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. அப்படி மாறுவதுதான் புத்திசாலித்தனம் என்றுகூட பலர் வாதாடினார்கள். ஆனால், எனக்கு அது சரியாகப்படவே இல்லை. பொறுமையாக ஒரே இடத்தில் இருந்ததால்தான் 'விப்ரோ'வில் பெரிய பதவிக்கு வரமுடிந்தது. 'மைண்ட் ட்ரீ'யையும் நல்ல முறையில் நடத்திச் செல்லமுடிகிறது.

3. வாய்ப்புகளைத் தவறவிடாதே!

'அவனைப் போலவே நானும் படித்தேன். இன்று அவன் எங்கோ போய்விட்டான். நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்' என்று புலம்புகிற மனிதர்களைப் பார்க்கிறேன். வாய்ப்புகள் இவர்களின் வீட்டு வாசற்கதவைத் தட்டும்போதெல்லாம் அதைக் கண்டறியும் திறன் இல்லாமல், அதை எதிர்கொள்ளும் தயாரிப்பு இல்லாமல் வீணாக்கி விட்டுவிட்டு பின்பு புலம்புவதில் அர்த்தமில்லை. வாய்ப்புகள் கடவுள் மாதிரி. 'நான் சிவபெருமான் வந்திருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு எந்தக் கடவுளும் நம் முன் வந்து நிற்கமாட்டார். 'உன்னை முன்னேற்றவே வந்திருக்கிறேன்' என்று எந்த வாய்ப்பும் நம் முன் வந்து நிற்காது. அது எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். அப்படி வரும்போது அதைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறவேண்டும். வாசல் வரைக்கும் வந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை; நான் ஒரு துக்கிரி என்று புலம்பக்கூடாது. என் அதிர்ஷ்டம், எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நான் தவறவிட்டதில்லை'' - சிரித்துக்கொண்டே பேசுகிறார் ஜானகிராமன்.

'இன்ஃபோசிஸி'ன் சி.இ.ஓ-வான கோபால கிருஷ்ணனை 'கிருஷ்' என்று சுருக்கமாக எல்லோரும் சொல்கிற மாதிரி, ஜானகிராமனை 'ஜானி' என்றுதான் 'மைண்ட் ட்ரீ'யில் அழைக்கிறார்கள். ''இந்தியாவுக்கு எப்போதும் கிடைக்காத வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ஒரு வளர்ந்த நாடாகவும் உலகின் சூப்பர் பவராகவும் ஆகும் சக்தி இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஜப்பான், சீனா, கொரியா போல நாமும் ஆர் அண்ட் டி-யில் அக்கறை செலுத்தி முன்னேறவேண்டும்'' என்கிறார் ஜானி.

ஜானி சொல்வதை இன்றைய இளைஞர்கள் கேட்கவேண்டும்.

என் மனைவியின் ரசிகன் நான்!

ஜானகிராமனின் மனைவி உமா ஓர் எழுத்தாளர். இவர் எழுதிய 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. 'அவருடைய எழுத்துக்கு முதல் ரசிகன் நான். அவர் எழுதும் கதைகள் எனக்கு ஆழமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது' என்கிறார் ஜானி. ஜானிக்கு ஒரு மகள்; ஒரு மகன். மகள் அனிதா 'ஹெச்.பி'-யில் வேலை பார்க்கிறார். வீணை வாசிப்பதில் கில்லாடி. மகன் சிவக்குமார், இப்போது இன்ஜினீயரிங் படிக்கிறார். 'வீட்டில் டி.வி. பார்ப்பது, தியேட்டருக்குச் சென்று கமல், ரஜினி படங்களைப் பார்ப்பதுதான் எனக்குப் பிடித்த ரிலாக்சேஷன். தவிர, வருஷத்துக்கு இரண்டுமுறை குடும்பத்தோடு கட்டாயம் சுற்றுலா போவோம்' என்கிறார் ஜானி.

No comments:

Post a Comment